search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் டிரைவர் ஜெயில்"

    கோவையில் 6 பேரை பலி கொண்ட விபத்தில் ‘ஆடி’ கார் டிரைவரை போலீசார் ஜெயிலில் அடைத்தனர். அவரது லைசென்சை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.க்கு பரிந்துரை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    கோவை:

    கோவை சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த ‘ஆடி’ கார் கூட்டத்தில் புகுந்து, 6 பேர் உயிரை பலி வாங்கியது.

    சுந்தராபுரத்தை சேர்ந்த கல்லூரி மாணவி சுபாஷினி (வயது 18), பூ வியாபாரி அம்சவேணி(34), ரே‌ஷன் கடைக்கு சென்ற குப்பாத்தாள் (70), ருக்மணி (65), ஓய்வு பெற்ற தபால்காரர் நாராயணன்(70), லோடுமேன் ஸ்ரீரங்கதாஸ் ஸ்ரீரங்கதாஸ் (69) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    இவர்களில் ருக்மணி தவிர மற்ற 5 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ருக்மணி உடல் நேற்று மாலை அடையாளம் காணப்பட்டது. இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஒப்படைக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்த சுந்தராபுரத்தை சேர்ந்த சோமசுந்தரம்(55), சுரேஷ்(45), நடராஜ் (75) ஆகிய 3 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கார் டிரைவரான குன்னூரை சேர்ந்த டிரைவர் ஜெகதீஷ்குமார்(35) என்பவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304(2)-உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தே அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி மரணம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்தனர்.

    அப்போது இவர் ஓட்டி வந்த கார் கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியின் தாளாளர் மதன்செந்தில் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் டிரைவர் ஜெகதீஷ்குமார் பெங்களுருக்கு காரில் கல்லூரி நிர்வாகிகள் சிலரை ஏற்றி சென்றுள்ளார்.

    விடிய, விடிய தூங்காமல் கார் ஓட்டிய அவர் நேற்று காலையிலும் கல்லூரி நிர்வாகிகள் சிலரை அழைத்து வர கோவைக்கு வந்த போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.

    6 பேர் உயிரை பலிவாங்கிய இந்த கார் கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடி ஆகும். புதுச்சேரி பதிவு எண் கொண்ட இந்த காரை கோவையில் ஓட்டி வந்துள்ளனர்.

    டிரைவர் ஜெகதீஷ்குமார் குடிபோதையில் இருந்தாரா? என்பதை கண்டு பிடிக்க ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு இன்று தெரிய வரும். இதற்கிடையே, டிரைவர் ஜெகதீஷ்குமாரை நேற்று இரவு மாஜிஸ்திரேட்டு பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தினர். ஜெகதீஷ்குமாரை வருகிற 14-ந் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து ஜெகதீஷ்குமார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்திப்பு பகுதியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காரை, டிரைவர் ஜெகதீஷ் குமார் ஓட்டி வந்துள்ளார். அவரது டிரைவிங் லைசென்சு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது லைசென்சை ரத்து செய்ய ஆர்.டி.ஓ.க்கு பரிந்துரை செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    பொள்ளாச்சி சாலையில் ஏற்கனவே தனியார் பஸ்கள் அதிவேகத்தில் சென்று விபத்துகள் ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இந்தநிலையில் அதிவேகமாக வந்த கார் 6 பேர் உயிரை பலி கொண்டுள்ளது.

    இதையடுத்து பொள்ளாச்சி சாலையில் விபத்துக்களை தடுக்க போலீசார் முக்கிய இடங்களில் பேரி கார்டுகள் அமைத்தனர். சில இடங்களில் வேகத்தடை அமைக்க உள்ளனர். அதிவேகத்தில் வாகனம் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் லைசென்சு ரத்து செய்யப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
    ×